'திகன முஸ்லிகளை தாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.. ஒத்துழைப்பு வழங்கிய எஸ் டி எப்.." அதிர்ச்சி தகவல் வெளியானது



2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டவையாகும் என இலங்கை மனித உரிகைள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள  அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

'திகன கலவரம்' என அறியப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான தொடர் வன்முறைகள் 2018 பெப்ரவரி 26 ஆம் திகதி அம்பாறை நகரில் ஆரம்பமாகி, அவை மார்ச் 2 ஆம் திகதியளவில் கண்டி மாவட்டத்துக்குப் பரவலடைந்தன.
இதன்போது முஸ்லிம்களையும்,  அவர்களுக்குச் சொந்தமான கடைகள் மற்றும் வீடுகளையும், பள்ளிவாசல்களையும் இலக்குவைத்துத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் வன்முறைகளும் கட்டவிழ்த்துவிடப்பட்டன.
இச்சம்பவம் தொடர்பான இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60 பக்க விசாரணை அறிக்கை பல்வேறு தரப்பினரதும் அழுத்தங்களைத் தொடர்ந்து, நீண்டகாலத்தின் பின்னர் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்டது.

திகன வன்முறைகளின் பின்னணி, அச்சம்பவத்துடன் தொடர்புடைய தரப்பினரிடமிருந்து திரட்டப்பட்ட வாக்குமூலங்கள், அவ்வன்முறைகளால் ஏற்பட்ட இழப்புக்கள் மற்றும் பாதிப்புக்கள், அச்சம்பவம் தொடர்பான அவதானிப்புக்கள் மற்றும் இத்தகைய இனரீதியான வன்முறைகளைத் தடுப்பதற்கான பரிந்துரைகள் என்பன அவ்வறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன.

அவ்வறிக்கையில் எச்.ஜி.குமாரசிங்க எனும் பெயருடைய நபரைத் தாக்கியதாக சந்தேகிக்கப்பட்ட நபர் சட்டத்தின் பிரகாரம் தெல்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதாகவும், இருப்பினும் அந்நபர் கைதுசெய்யப்படவில்லை என குறித்தவொரு ஒருங்கிணைக்கப்பட்ட குழுவினரால் பரப்பப்பட்ட போலித்தகவல்களே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தீவிரமடைவதற்கு வழிகோலியதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளில் சிலர் இவ்வன்முறைத்தாக்குதல்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், ஒட்டுமொத்த அதிகாரிகளும் அதனை ஊக்குவிக்கும் வகையில் செயற்படவில்லை என ஆணைக்குழுவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
 புலனாய்வுப்பிரிவின் பங்கேற்பு, வளங்கள், பாதுகாப்புத்தரப்பு உறுப்பினர்களின் போதாமை காரணமாகவே வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி ஏற்பட்டதாகவும், ஆகையினாலேயே சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இராணுவத்தினரின் தலையீட்டைக் கோரவேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

'இலங்கையில் முஸ்லிம் சமூகத்தினரை இலக்குவைத்து தாக்குதல்கள் நடாத்தப்படும் கட்டமைக்கப்பட்ட வடிவத்தினுள் திகன சம்பவம் பொருந்துகின்றது. இவ்வாறான சம்பவங்கள் ஜிந்தோட்டை மற்றும் அம்பாறையிலும் 1915 ஆம் ஆண்டளவில் வேறு சந்தர்ப்பங்களிலும் பதிவாகியிருக்கின்றன என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.